Tuesday, December 26, 2006

Kavi Perarasu Vairamuthu

கவிப்பேரரசு வைரமுத்து in the Ananda Vikatan, 8 September 2002

''ஐயாயிரத்தைந்நூறு பாடல்களைத் தாண்டியும் இன்னும் கவிதைத் தமிழும் கற்பனைச் சிறகும் இளமைத் துள்ளலுடன் இருக்கிற சாதனைக்குக் காரணம் என்ன?'' '' 'ஆயிரம் பல்லவிகள்' என்று நானாகவே ஒரு திட்டம் வகுத்துக்கொண்டு, இரவுபகலாகப் பல்லவிகள் எழுதி வருகிறேன். இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகான பசிக்கும் இப்போதே என்னால் பந்தி வைக்க முடியும். ஆனால், வாங்கிக்கொள்ளத் தான் வயிறுகள் இல்லை. இப்போதெல்லாம் நான் ஒரு பல்லவி, இரண்டு சரணம் என்றுதான் கொடுக்கிறேன். நான்கைந்து பல்லவிகள் கொடுத்தால், அதில் சுமாரான ஒன்று தேர்வாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. அதற்காக நான் குறைவான வரிகளே எழுதுகிறேன் என்று பொருள் இல்லை. நான் கொடுப்பதே பதினொன்றாவது பல்லவிதான். முதல் பத்து, எனக்குள்ளே இருக்கும் குப்பைக் கூடைக்குத்தான். 'தங்கத்தில் ஒட்டியிருக்கும் மாசு, தூசு எல்லாவற்றையும் துடைத்துவிட்டுச் சுத்தமாக உங்களிடம் தருகிறேன்' என்று இயக்குநர்களிடம் சொல்லி விடுவது வழக்கம்... கிராம வாழ்க்கையும் நாட்டுப் பாட்டு நாட்டமும்,
'காதுல நரைச்ச முடி
கன்னத்துல குத்துது குத்துது
சுழியில படகுபோல
எம்மனசு சுத்துது சுத்துது'
என்று எழுதவைத்தது. உலகம் சுற்றிய அனுபவம்,
'கடல் மேல் சிவப்புக் கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்'
என்று பூகோளம் பேசியது.
இளைஞர்களோடிருக்கும் இடைவெளி இல்லாத தொடர்பு
- 'மெல்லினமே மெல்லினமே
- நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
- அதை வானம் அண்ணாந்து பார்க்கும் நான் தூரத் தெரியும் வானம்
- நீ துப்பட்டாவில் இழுத்தாய் என் இருபத்தைந்து வயதை ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்'
என்று உல்லாசப்படுத்தியது. ஆழ்ந்த இலக்கியப் பயிற்சிதான், 'முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ'
என்று சொற்சித்திரம் வரைந்தது.
சங்க இலக்கிய ஆளுமைதான்,
'நறுமுகையே நறுமுகையே நீயரு நாழிகை நில்லாய் அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர்வடியக் கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா?'
என்று பனையோலை யில் இருந்த பழந்தமிழை கம்ப்யூட்டர் மெட்டுக்குள் சிக்கென்று உட்கார வைத்தது. ''பாபாவில் உங்களுக்குப் பிடித்த பாட்டு?'' ''எல்லாப் பாட்டும் பிடிக்கும். அதில் இடம்பெறாத பாடல்களில் ஒன்று ரொம்பப் பிடிக்கும். பாபா மூட்டை சுமக்கும்போது தாய் சுஜாதாவின் கண்ணில் கண்ணீர் வழியச் செய்யும் பாட்டு -
'கண்ணுக்கினிய மகனே!
- உன்னை
கருவில் சுமந்தேன் மகனே
கருவறை கழிந்து விழுந்த பின்னே
கையில் சுமந்தேன் மகனே!
மார்பில் தாய்ப்பால் பருகும்போது
மடியில் சுமந்தேன் மகனே
தூங்கும்போதும் ஏங்கும்போதும்
தோளில் சுமந்தேன் மகனே!
கையை மீறி வளர்ந்தபோது
கண்ணில் சுமந்தேன் மகனே!
நெஞ்சு தானாய் நிற்கும் வரைக்கும்
நெஞ்சில் சுமப்பேன் மகனே!
சுமக்கப் பிறந்தவள் நான் தானே
- நீ சுமந்து அலைவது ஏன் மகனே!
மூட்டை சுமக்கும் கூலியல்ல
- நீ நாட்டைச் சுமக்கப் பிறந்தவனே!'
- இந்தப் பாட்டு இடம்பெறாமல் போனதற்காக யார் மீதும் குறை சொல்ல முடியாது. திரைக்கதையின் நீளம் இதை அனுமதிக்கவில்லை. இப்படி மலர்ந்து மலர்ந்து எனக்கு உள்ளேயே உலர்ந்துபோன பூக்கள் ஓராயிரம்...''
''எந்த வகைப் பாட்டெழுதுகிற போது மனம் நிறைகிறது உங்களுக்கு?''
''காதல் பாடல் எழுதுகிறபோது கரைகிறது மனது. ஆனால், தன்னம் பிக்கைப் பாட்டு, தத்துவப்பாட்டு, எழுச்சிப்பாட்டு, புரட்சிப் பாட்டு, இளைஞர்களை எழுச்சி கொள்ளவைக்கும் சமுதாய மேம்பாட்டுப் பாட்டு எழுதுகிறபோது தான் மனது நிறைகிறது. 'மனிதா மனிதா..', 'எரிமலை எப்படிப் பொறுக்கும்?', 'புத்தம்புது பூமி வேண்டும்', 'ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை', 'எழுகவே படைகள் எழுகவே', 'வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்', 'ஒருவன் ஒருவன் முதலாளி', 'தமிழா தமிழா', 'விடை கொடு எங்கள் நாடே', 'கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்', 'மனிதன் மனிதன் எவன்தான் மனிதன்?' - இவைபோன்ற பாடல்கள் எழுதத்தான் நெஞ்சு துடிக்கிறது. ஆனால், மாறிவரும் திரையுலகப் போக்குகளில் இவைபோன்ற பாடல்களுக்குக் கதைச்சூழல் இல்லை. இவை போன்ற பாடல்கள் எந்தப் படத்தில் இடம்பெற்றாலும் அந்தப் பாடல்களுக்கு இனிமேல் பணம் வாங்காமல் எழுதிக் கொடுப்பது என்று தீர்மானித் திருக்கிறேன். விகடன் மூலம் இதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'புரட்சிக்காரன்' பாடல்களுக்குப் பணம் வாங்காமல்தான் எழுதிக் கொடுத்தேன். அனுபவத்தால் தமிழும் மனசும் பண்பட்டிருப்பதாக உணர்கிறேன். இனிமேல் இன்னும் உயர்ந்த இன்னும் தெளிந்த பாடல்களும் இலக்கியங்களும் படைக்க விரும்புகிறேன்!''
சந்திப்பு: ரமேஷ் வைத்யா
இனி வரவிருக்கும் திரைப்படங்களிலிருந்து கவிஞருக்குப்பிடித்த சில வரிகள் இங்கே...
கமல் நடிக்கும் 'அன்பே சிவம்' படத்தில் ஓவியரான கமலும் அவரது தோழியும் சேர்ந்து ஒரு படம் வரைகிறார்கள். ஓவியத்தோடு சேர்ந்து நெருக்கமும் வளர்கிறது. இந்தச் சூழலுக்கான வரிகள்:
ஆண்: பூ வாசம் புறப்படும்
- கண்ணே பூ நான் வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் - பெண்ணே
தீ நான் வரைந்தால்
பெண்: உயிர் அல்லதெல்லாம்
உயிர் கொள்ளுமென்றால்
உயிர் உள்ள நானோ என்னாகுவேன்?
உன் பொன்விரல் என்னுடல் தீண்டுமா?
ஷாம் நடிக்கும் 'இயற்கை' படத்தில் இந்தப் பாட்டு:
'காதல் வந்தால் சொல்லியனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
கண்ணீர் வழிய உயிரும் வழியக்
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
- மனம் வெட்ட வெளியிலே வாடுதடி
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி'
அஜீத் நடிக்கும் 'வில்லன்' படத்தில் ஊனத்தைக் கொச்சைப்படுத்தாமல் நம்பிக்கையூட்டுகிற ஒரு பாடல்: 'உள்ளம் உள்ளம் பெரிதாய் இருந்தால்
உலகம் ரொம்பச் சின்னதடா
ஊனப்பட்ட நிலவும் ஒருநாள் பௌர்ணமி ஆகுமடா!'

No comments: